Thursday, December 16, 2010

இயற்கை-அடுத்த தலைமுறை இதை அனுபவிக்க முடியுமா?

மேற்கு மலைத் தொடர்ச்சியின் ஒரு பகுதியான ஆனைமலைத் தொடரில், அடர்ந்த மழைக் காடுகள் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த மானாம்பள்ளி என்ற கானகப் பகுதிக்கு இயற்கை அன்பர்கள் குழு, இரு நாட்கள் பயணமாக காட்டுயிர் ஆசிரியர் திரு முகமது அலி அவர்களின் தலைமையில், இயற்கை வரலாறு அறகட்டளை யின் தலைவர் டாக்டர் வசந்த் ஆல்வா அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கோடை கால த் துவக்கத்தில், காலை நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டோம்.


சுற்று சுழல் பற்றி மக்களிடம் உள்ள விழிப்புணர்வு,சுழல் மாசுபடுவதில் உள்ள பண்பாட்டு சீரழிவு,சுழல் பாதிக்கபடுவதில் பணக்கார மற்றும் நடுத்தர வர்க்க மக்களை விட ஏழைகளால் பாதிப்பு குறைவு பற்றியும்,அவை சார்ந்த அனுபவங்களை, ஆழமான பார்வையில் - தமிழ்நாட்டில் சமூகம் சார்ந்த காட்டுயிர் ஆய்வில் முதன்மையானவரும்,காட்டுயிர் இதழ் ஆசிரிருமான திரு முகமது அலி அவர்களின் அறிவு சார்ந்த பேச்சின் ஊடே பயணம் களை கட்டியது.

 
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட வால்பாறை சரகத்தை நோக்கி நகர்ந்த பொழுது,மலைக்காடுகளால் சூழப்பட்ட பகுதி அல்ல - தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட, மழைக்காடுகள் அமைந்த பகுதியாக தான் எங்கள் கண்களில் பட்டது. ஏனென்றால் "எங்கெங்கு காணினும் தேயிலை தோட்டங்களே" இருந்தன. "யானைகள் அட்டகாசம்", "யானைகள் ஊருக்குள் புகுந்தன", போன்ற செய்திகள் எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இந்த தேயிலை தோட்டங்ககளை பார்க்கும் பொழுது எங்களால் உணர முடிந்தது.

காடுகள் சிறுத்தும், தோட்டங்கள் பெருத்தும், இருப்பதால் வன விலங்குகள் குறைந்தும், அழிந்தும், தப்பி பிழைத்த உயிர் இனங்கள் குறிப்பாக யானைகள் உணவிற்காகவும், குடிநீருக்காகவும் எங்கு செல்லும்? அவை சார்ந்த பிரச்சனைகளை அசை போட்டபடி எங்கள் பயணம் தொடர்ந்தது.

பல அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகளை தன்னகத்தே கொண்ட இப்பகுதில் சில வகை மரங்களையும் பறவை இனங்களையும் கண்டு களித்துடன் அதன் சிறப்புகளை பற்றி ஆசிரியரிடம் கேட்டோம். குறிப்பாக தாகை செடிகள் (fern) எனப்படும் பெரணிகள் டைனோசர் காலத்தில் இருந்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பதை ஒரு உயரமான கோங்கு மரத்தின் அடியில் நின்று கொண்டு உரை ஆற்றியது எங்களது அறிவுக்கு பரவசத்தை ஊட்டியது. மேலும் பெரணிகளை(fern) ஆனைமலை காடுகளில் இருந்துதான் நீலகிரி காடுகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது பற்றி ஆசிரியர் கூறிய விதம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

மானாம்பள்ளி ஆற்றங்கரை யோர கானக விடுதிக்கு அந்தி சாயும் நேரத்தில் வந்து சேர்ந்தோம். பறவைகளின் ஒலிகளும், கானகத்து பூச்சி களின் ஒலிகளும் மனதை இரம்மியமாக்கியது. ஆற்றங்கரை யின் மேல் பகுதியில் வட்டமிட்டு அமர்ந்து காட்டுயிர் அன்பர்களின் அறிமுக கூட்டம் ஆரம்பித்தது. இயற்கை பாதுகாப்பு, இயற்கையை அறிந்து கொள்ளுதல், மட்டுமின்றி இயற்கையை இரசிக்கவும் கற்று கொள்ள வேண்டும் எனத் தொடங்கி இயற்கை வரலாற்று அறகட்டளையின் எதிர் கால திட்டங்கள்,அதற்கான அன்பர்களின் பங்களிப்பு, அவரவர் வாழ்வியலில் நடைமுறை பழக்க வழக்கங்கள், காட்டிற்குள் செல்லும் போது பின்பற்ற வேண்டிய அம்சம்கள் பற்றி விரிவாக பேசப்பட்டது.

இரவு சூழ்ந்தது, நிலவு வெளிச்சம் இரவை பனி படர்ந்த பகலாக மாற்றியது. நிலவொளியில் எங்களது அறிவு பயணம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கானகத்து ஒலிகளில், சிள் வண்டுகளின் சத்தம் திடீரென்று நின்றது, அனைவரும் அமைதியானோம். எங்கோ ஓரிடத்தில் மந்தியின் குரல் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. ஆற்றில் நீரின் சலசலப்பு கேட்டது. அனைவரும் காதுகளை கூர்மையாக்கினோம். ஆற்றங்கரை யின் எதிர் திசையில் இருந்து கடா மானின் சத்தம், அக்கானகத்தின் குறிப்பிட்ட தூரம் வரை எதிரொலித்தது, சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தது. நாங்கள் பரவசம் அடைந்தோம்.அனைவரும் ஆசிரியரின் முகத்தை நோக்கினோம். "நன்றாக கவனியுங்கள்" என்று கூறி ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி காட்டினார். 

 மரம் அறுப்பதைப் போன்ற ஒரு விதச் சத்தம் சில நிமிடங்கள் நீடித்தது. 'சிறுத்தை' என மெல்லிய குரலில் ஆசிரியர் கூறியதும், அனைவரது உடலிலும் மின்சாரம் பாய்வது போல பரவசமும், பயம் கலந்த மகிழ்சியும் உண்டாயிற்று.

சிறுத்தை தன் உணவு வேட்டைக்காக கடாமானை குறி வைத்து நகர்ந்து செல்லும் இந்நிகழ்ச்சி- எங்களது அருகில் நடக்கும் இச் சம்பவம் சில மணித்துளிகள் நீடித்தது. அற்புதமான இச் சம்பவம் எங்களது கானக பயணத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. வெகு நேரம் கழித்து இம்மகிழ்ச்சி லே உறங்கபோனோம்.

அதிகாலை ஆற்றங்கரையில் சிறுத்தையின் காலடி தடத்தை ப் பார்த்து மகிழ்ந்து, அதே இடத்தில் சிறுத்தை குடும்பத்தை பற்றி விரிவாக, குறிப்பாக புலியை பற்றி ஆழமான பலச் செய்திகளையும், சிந்தனைகளையும் ஆசிரியர் விளக்கினார்.

பயணம் முடிந்து, கானகத்தை விட்டு வெளியேறி, நாங்கள் வால்பாறை சரகத்தை விட்டு கடக்கும் பொழுது, மனம் தளர்ந்து, ஒரு விதச் சோகத்துடனே பொள்ளாச்சி திரும்பினோம். இனி எதிர் காலத்தில் இதுப் போன்ற மிச்சம் மீதி இருக்கின்ற கானக செல்வங்களையும் காப்பாற்ற முடியுமா? பாதுகாக்க முடியுமா? அடுத்த தலைமுறை இதை அனுபவிக்க முடியுமா? அல்லது நாம் தான் அடுத்த முறையும் இதை காண முடியுமா? என்ற ஏக்கத்துடன் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கையசைத்து கலைந்து போனோம்!!!

இயற்கையாளர்,
A.M.அம்சா,

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP