திரிபோலி எங்கள் வசம்: லிபியா கிளர்ச்சிக்காரர்கள் அறிவிப்பு .
மோதல் முன்னரங்கு என்பது நகரின் பல பாகங்களிலும் காணப்படுகிறது என்றாலும், தலைநகரின் பெரும்பகுதி தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர்.நூற்றுக்கணக்கான கிளர்ச்சிப் படையினர் ரொக்கெட் ஏவுகணைகளையும் பிற ஆயுதங்களையும் ஏந்தியபடி டிரக் வண்டிகளில் ஏறி நகர மையத்தில் உள்ள பச்சை சதுக்கத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று அங்குள்ள ராய்டர் செய்தி நிறுவன முகவர் ஒருவர் கூறுகிறார்.
தலைநகருக்குள் வரும் கிளர்ச்சிப் படையினரை வரவேற்கும் முகமாக இச்சதுக்கத்தில் நேற்றிரவு திரிபோலி நகரவாசிகள் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பரித்திருந்தனர்.தமது போராளிகள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படக் கூடாது என்று கிளர்ச்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடாஃபியின் மகன்கள் கைது
இதனிடையே, கர்ணல் கடாஃபியின் மகனும், கடாஃபிக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய நிலையில் இருந்தவருமான சயிஃப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி உறுதிசெய்துள்ளார்.கடாஃபியின் மற்றொரு மகனான முகம்மதும் கிளர்ச்சிக்காரர்களிடம் வசம் வந்துள்ளார்.
கடாஃபியின் இவ்விரு மகன்களையும் திரிபோலியில் உள்ள தேசிய இடைக்கால நிர்வாக சபையினிடம் கையளித்துள்ளதாகவும், இவர்கள் அங்கிருந்து பென்காஸிக்கு கொண்டுசெல்லப்படலாம் என்றும் கிளர்ச்சித் தரப்பு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
0 கருத்துரை:
Post a Comment