Thursday, December 23, 2010

புளி விலை கிலோ ரூ.110 : 3 மாதத்தில் 2 மடங்கு விலை உயர்வு

சேலம்: தமிழகத்தில் புளியின் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதத்தில் அதன் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் புளியின் வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் பெரிய வியாபாரிகள் அதிக அளவில் புளியை பதுக்கி வைத்துள்ளதால் நேற்று புளி விலையில் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. தமிழகத்தில் பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் புளி சீஸன் ஜூன் மாதம் வரை இருக்கும். இந்த காலங்களில் புளியின் விலையில் சரிவு ஏற்படுவது வழக்கம்.

ஆனால் நடப்பாண்டு புளி அதிக அளவில் விளையும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. சேலம், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் புளி மண்டிகளுக்கு, ஜூன் மாதம் மகாராஷ்டிரா, பீகார், சத்திஸ்கர், ஒரிஸா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புளிகள் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளது. இந்த புளிகளை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து மண்டிகளிலேயே வைத்துள்ளனர். ஆனால், வெளிமார்க்கெட்டில் புளியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்து புளியின் வரத்து முற்றிலும் நின்று விட்டது. சேலம் மாவட்டத்தில் புளி அதிக அளவில் விளையும் வாழப்பாடி, ஆத்தூர், ஏற்காடு, கல்ராயன் மலைப்பகுதி, தர்மபுரி மாவட்டம் அரூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து பெய்த மழையால் புளி அறுவடையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் லீபஜாருக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த புளியின் வரத்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் சேலத்தில் இருந்து சென்னை, விருதுநகர், மதுரை ஆகிய இடங்களுக்கு புளி விற்பனை முற்றிலும் தடை பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆந்திர மாநிலம் இந்துப்பூர், விஜயவாடா, ஹைதராபாத், கர்நாடக மாநிலம் தும்கூர், ஹேஸ்பேட்ல மகாராஷ்டிரா அகமத்நகர் ஆகிய இடங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள வியாபாரிகள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் புளியை நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதத்தில் 45 ரூபாய்க்கு விற்ற புளி நவம்பரம் மாதத்தில் 65 ரூபாய்க்கு உயர்ந்தது. இந்த உயர்வு டிசம்பர் முதல் வாரத்தில் 100 ரூபாயாக அதிகரித்தது. இந்நிலையில் மொத்த வியாபாரிகள் குடோன்களில் புளியை இருப்பு வைத்துக் கொண்டு, மேலும் புளியை கொள்முதல் செய்ய துவங்கி உள்ளனர். இதனால் வெளி மார்க்கெட்டில் புளியின் தேவை அதிகரித்து நேற்று கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்து கிலோ 110 ரூபாய்க்கு விற்கிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். எனவே புளியின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் குடோன்களில் புளியை தேக்கி வைத்துள்ள வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP