Sunday, November 28, 2010

நெய்வேலியை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலும் பழுப்பு நிலக்கரி

சென்னை : ""நெய்வேலியை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்திலும் பழுப்பு நிலக்கரி அதிகளவில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் சமீபத்திய ஆய்வில் கிடைத்துள்ளன. அது குறித்து தீவிர ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது,'' என்று இந்திய புவியியல் ஆய்வுத்துறை பொது இயக்குனர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.

இந்திய புவியியல் ஆய்வுத்துறை சார்பில், "தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் புவியியல் மற்றும் கனிம வளங்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா, கிண்டியில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில், ஆய்வுத்துறை இயக்குனர் கான் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலை வெளியிட்ட இந்திய புவியியல் ஆய்வுத்துறை பொது இயக்குனர் ஜஸ்வந்த் சிங் பேசியதாவது: தமிழகத்தில் இரண்டு வகையான படிமங்கள் உள்ளன. ஒன்று மிகவும் பழமையான ஆர்க்கேயன் படிமங்கள். இது 80 சதவீத அளவில் காணப்படுகிறது. மற்றொன்று செடிமென்டரி படிமங்கள். இது 20 சதவீதம் காணப்படுகிறது. தமிழகத்தில் லிக்னைட், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய கனிமப் பொருட்களும் உள்ளன. மேலும், இரும்பு தாது, அலுமினிய தாது, தங்கம், பிளாட்டினம், மோலிபிட்னம் (முரிவெள்ளி) மற்றும் பாலிமெட்டாலிக் சல்பைடு ஆகியவையும் உள்ளன. அலோகம் மற்றும் தொழில் துறை கனிமங்களும் கிடைக்கின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் கிராடைட்டும், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் லைம் ஸ்டோன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், நாமக்கலில் 23 மில்லியன் டன் இரும்பு தாதுவும், அரூரில் 2.74 மில்லியன் டன் மோலிபிட்னம் தாதுவும், சிவகங்கை மாவட்டத்தில் 0.76 மில்லியன் டன் கிராபைட் தாது 13 சதவீத எப்.சி.,(பிக்ஸ்டு கார்பன்) இருப்பதும், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 75 மில்லியன் டன் லைம்ஸ்டோன்கள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கனிமவள தாதுக்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நெய்வேலியை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்திலும் பழுப்பு நிலக்கரி அதிகளவில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் சமீபத்திய ஆய்வில் கிடைத்துள்ளது. அது குறித்து தீவிர ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது. கனிம வளங்களை கண்டறிவது மட்டுமல்லாமல் பல்வேறு பணிகளை இந்திய புவியியல் ஆய்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.

அணைக்கட்டுகள், சுரங்கங்கள், மின்சாரம் தயாரிப்பு, நிலச்சரிவு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த துறை சார்பில் கடந்த 150 ஆண்டு கால ஆராய்ச்சி முடிவுகளை புத்தகங்களாகவும், தொகுப்புகளாகவும் வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது.  நிலவியல் மற்றும் புவியியல் வரைபடங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகள் புவியியல் துறை படிக்கும், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு ஜஸ்வந்த் சிங் பேசினார்.

தமிழக தொழில்துறை முதன்மை செயலர் ராஜிவ்ரஞ்சன் பேசுகையில்,"இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் ஆய்வுகளுக்கு தமிழக அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். தமிழில் வெளியிடப்பட்ட இந்நூல், புவியியல் துறை படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்' என்றார். விழாவில், துணை பொது இயக்குனர் அய்யாசாமி, இயக்குனர் பாலசுப்பிரமணியன், துணை இயக்குனர் சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP