Tuesday, August 31, 2010

குமரியில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு



திண்டாடும் மாணவிகள், இளம்பெண்கள்
குமரியில் வெளிச்சத்துக்கு வராமல் அதிகமாக நடந்து வரும் சைபர் கிரைம் குற்றங்களால் மாணவிகள், இளம்பெண் கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இணையதளங்கள், செல்போன்களின் அசூர வளர்ச்சி அறிவியலின் முன்னேற்றமாக இருந்தாலும், பல குற்ற செயல்களுக்கு இதுவே அடிப்படையாக அமைந்து விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நவீன வசதிகளை பயன்படுத்தி பல சமூக விரோத செயல்கள் தாராளமாக தலை தூக்க தொடங்கி இருக்கின்றன. இவற்றில் செல்போன் மற்றும் இணையதளங்களின் பங்கு அடிப்படையாக உள்ளது.
இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை மையப்படுத்தி இந்த வகையிலான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி இருப்பது அதிர்ச்சியை அதிகரித்துள்ளன.
ஆபாச எஸ்எம்எஸ்கள், மிரட்டல் இமெயில்கள் என பல நிலைகளில் குற்றங்கள் பெருகி வருகிறது. இந்த வகை குற்ற செயல்களில் பாதிக்கப்படுகிறவர்கள் மாணவிகளாக அல்லது இளம்பெண்களாக இருப்பதால் புகார் தெரிவிப்பதில் தயக்கம் காட்டுவதும் குற்றவாளிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெருகி வரும் இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு இல்லாததும் இவ்வகை குற்றங்களை அதிகரிக்க செய்துள்ளது. பஸ் நிறுத்தங்கள், சினிமா தியேட்டர்கள், ரயில் நிலையங்கள் என பொது இடங்களில் சர்வ சாதரணமாக காமிரா மொபைல் போன்கள் மூலம் மாணவிகளை, இளம்பெண்களை பல கோணங்களில் படமெடுத்து வருவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
சமீபத்தில் கூட நாகர்கோவிலில் கல்லூரி மாணவி ஒருவர் காதலிக்க மறுத்ததால், தனது படத்துடன் மாணவியை இணைத்து இதை இன்டர்நெட்டில் பரவவிட்டதோடு, மாணவி குறித்த தவறான தகவலையும் எழுதி பரப்பிய கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவர் பிடிபட்டார். ஆனால் மாணவி தரப்பில் போதுமான புகார்கள் இல்லாததால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் வெறும் எச்சரிப்போடு நிறுத்திக் கொண்டது காவல் துறை.
இளம்பெண்கள், மாணவிகளை ஆபாசமாக நவீன காமிரா செல்போன் மூலம் எடுத்து அவற்றை மெமரி கார்டுகளில் படமாக்கி, செல்போன் மூலம் பரப்பி விடப்படுகிறது. இது போன்று எடுக்கப்படும் படங்கள் சம்பந்தப்பட்ட இளம்பெண்கள், மாணவிகளுக்கு தெரியாமலேயே எடுக்கப்படுவது ஆகும்.
இது போன்ற குற்றங்களை தடுப்பதும், விசாரிப்பதும் சைபர் கிரைம் பிரிவுகள் ஆகும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி தலைமையில் உள்ள சைபர் கிரைம் பிரிவு தான் விசாரிக்கிறது. இது சம்பந்தமான புகார்களை சட்டம் ஒழுங்கு போலீசார் சென்னைக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கைக்கு பல காலம் காத்திருக்கும் நிலை உள்ளது.
மண்டல வாரியாக சைபர் கிரைம் பிரிவு துவக்கப்படுவதாக சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் செயல் இழந்து போன நிலையில் தான் உள்ளது. அந்தந்த மாவட்டங்களுக்கு என தனித்தனியாக தொடங்கப்படாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் மண்டல வாரியாக சைபர் கிரைம் பிரிவு துவக்கப்பட வேண்டும் என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது.
மேலும் அந்தந்த மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களில் இது போன்ற ஒரு புகார்களை வாங்க ஒரு தனிப்பிரிவை தொடங்கி, புகார் கொடுப்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை ரகசியமாக வைத்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். மோசடி உள்ளிட்ட வழக்குகளை மத்திய குற்றப்பிரிவினர் விசாரிப்பதை போல், சைபர் குற்றங்கள் குறித்த அனைத்து புகார்களையும் இந்த சைபர் கிரைம் பிரிவு விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இளம்பெண்கள், மாணவிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது   .           நன்றி : தமிழ் முரசு

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP