Monday, August 9, 2010

அணு, அகிலம், சக்தி ! எல்லாப்புகழும் அவன் ஒருவனுக்கே


atoms-man

--------எல்லாப்புகழும் எல்லா அண்டசராசரத்தையும் படைத்த அவன் ஒருவனுக்கே--------


பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
பொரி உருண்டை ஒன்று
பரமாணுக்களாகி,
துணுக்காகி அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகித்
துண்டுக் கோள்கள் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகிப் பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகித்
சீராகிச் சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து, பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,


பாசபந்த ஈர்ப்பில்
நீராகி, நிலமாகி, நெருப்பாகிப்
வாயுவாகிக்
கல்லாகி, மண்ணாகிக் காற்றாகி
புல்லாகி, நெல்லாகிப்
புழுவாகி, மீனாகிப் பறவையாகி
நில்லாமல் செல்லும்
எல்லாமே படைத்தாய் !
ஒன்றுக்குள் ஒன்றாகிப்
புணர்ச்சியில்
ஒன்றும் ஒன்றும் பலவாகி
உருவுக்குள் கருவாகி,
தாயின் கருவுக்குள் உருவாகி
உயிரளித்து
நீயாகி, நானாகி, அவனாகி,
விலங்குகளாய்
வடிவாகி, விரிவாகி,
மடிய வைத்தாய் !
கன்றுக்குள் பசுவாகிப் பாலாகி,
ஒன்றுக்கு ஒன்று வித்தாகி,
ஒன்றும், ஒன்றும் சேர்ந்து
மூன்றாகி, மூன்று
மூவாயிரம் கோடி யாகித்
தொடர்ந்து
வித்திட்டாய் ! வேரிட்டாய் !
கிளை விட்டாய் !
விழுதிட்டாய் !

பெண்ணுக் குள்ளே எப்படி
என்னை வைத்தாய் ?
கண்ணுக் குள்ளே எப்படி
எண்ணற்ற
வண்ணங்கள் வைத்தாய் ?
வான வில்லை எப்படி ஓவியமாய்
வரைந்து வைத்தாய் ?
மரத்தில்
காயாகிக் கனியாகிக்
முதிர்ந்து மூப்பாகி
உதிர்ந்து விழ வைத்தாய் !
முதலாகி
முதலுக்கு மூலமாகி,
தோற்றக் காலம் அறியா
மூலத்தின் அதிபனாகி
முடிவே இல்லா யுகத்தில்
முதியோ னாகி,
வடிவே இல்லாத உருவாகி
உள்ளத்தைக் கடந்த
ஒளியாகிக் கனலாகி
அகிலாண்ட கோடி யெல்லாம்
உப்பி விரிந்திடும்
சோப்புக் குமிழாகி
ஒப்பற்ற உன் மகத்தான
தோற்றத்தைக் கண்டு
உள்ளம் துடிக்க வைப்பாய் ! --------எல்லாப்புகழும் எல்லா அண்டசராசரத்தையும் படைத்த அவன் ஒருவனுக்கே--------

அன்புடன் - பாரதன்

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP