Saturday, August 14, 2010

வந்தேறிகளால் வந்தது நோய் - ராஜ்தாக்கரே அடாவடி இனவாத தத்துவம்

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியாவின் எந்த மூலையிலும் தொழில் செய்யவும், வசிக்கவும் உரிமை உண்டு என்பது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையாகும். ஆனால் மும்பையை மையமாக கொண்டு அரசியல் அடாவடி செய்துவரும் பால்தாக்கரே மற்றும் அவரது வழித்தோன்றல் ராஜ்தாக்கரே வகையாறாக்கள் 'மராட்டியம் மராட்டியர்களுக்கே' என்ற இனவாத தத்துவத்தை முன்வைத்து அரசியல் குளிர் காய்ந்துவருவதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் பல்வேறு காலகட்டங்களில் மராட்டியர் அல்லாத வேறு மாநில மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட வரலாறும் இந்த கும்பலுக்கு உண்டு. 

 இந்த சித்தாந்தத்தின் உச்சகட்டமாக,'மும்பையில் வேகமாக பரவிவரும் மலேரியா காய்ச்சலுக்கு காரணம் வந்தேறிகள்தான். அசுத்தமான இடத்தில் தான் கொசுக்கள் பரவுகின்றன; இந்த அசுத்தம் எப்படி வந்தது..? வந்தேறிகளால் தான் வந்தது. யார் இவர்கள்.? சேரிகளில் வசிப்பவர்கள். அதாவது உ.பி.யிலிருந்து இங்கு குடியேறியவர்கள், சேரிகள் அமைத்துள்ளனர். இவர்களால்தான் கொசுக்கள் பரவுகின்றன. என்று 'தமாஷ்' செய்துள்ளார் ராஷ்ட்ரிய நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே.

பிரிவினைவாத-இனவாத கொள்கையை முன்வைத்து நாட்டை துண்டாட நினைக்கும் இவர்களை சட்டம் அந்தந்த காலகட்டத்தில் முறையாக அடக்கி வைத்திருக்குமேயானால், சொந்த நாட்டின் மக்களையே வந்தேறிகளாகவும் அவர்கள் மூலமாகத்தான் நோய்கள் பரவுகின்றன என்று ஏளனமாகவும் பேசும் துணிச்சல் ராஜ்தாக்கரே வகையறாக்களுக்கு வந்திருக்காது. ஆனால் என்னதான் இந்த கும்பல் உச்சகட்ட வன்முறையில் ஈடுபட்டாலும் அவர்கள் மீதான நடவடிக்கை என்பது பெயரளவில் வழக்குகளாக இருப்பதால்தான் அவர்களால் இப்படி தொடர்ந்து விஷமக் கருத்துக்களை விதைக்கமுடிகிறது. அதே நேரத்தில் வந்தேறிகளால்தான் நோய்கள் பரவுவது உண்மையெனில், ராஜ்தாக்கரேயின் முன்னோர்களும், கைபர்-போலன் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த 'வந்தேறிகள்' என்று வரலாறுகள் கூறுகின்றனவே. அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ராஜ்தாக்கரே..?

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP