Tuesday, August 10, 2010

பொய் கேஸ் போட்ட போலிசுக்கு ஜெயில்..!

மாணவர் உட்பட 3 பேர் லஞ்சம் கொடுக்க மறுத்ததால், கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டு 160 நாட்கள் சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எஸ்.ஐ.யை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நான்காண்டில் பல திருப்பங்களை கண்ட இந்த விவகாரத்தில், பொய் வழக்கு போட்டு தப்பிக்க நினைத்த போலீசாரை துரத்திப்பிடித்துள்ளது நீதி என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் அனுமோகன். இன்ஜினியரிங் படிப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் ஜெயக்குமார், சரூன் ஆகியோருடன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்துக்கு 2006ம் ஆண்டு மே மாதம் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்காசி சோதனைச் சாவடியில் இவர்கள் வந்த காரை ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காந்தி, எஸ்.ஐ.ராஜமாணிக்கம் (எ) ராஜகுமார், ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் ஆகியோர் மறித்துள்ளனர்.
ஆனால் கார் நிற்காமல் சென்றது. அதனால் காரை விரட்டிச் சென்று தென்காசி பஸ்நிலையத்தில் மறித்தனர். காரில் இருந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் ஸி3 லட்சம் மாமூல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கஞ்சா வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.
பின் அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்று இரவு முழுவதும் பணம் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்காததால், 3 பேரும் கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் போட்டு, சிறையில் அடைத்து விட்டனர்.
160 நாட்கள் சிறையில் இருந்த பின் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தங்கள் மீது பொய் வழக்குப் போட்டதாக மதுரை நீதிமன்றத்தில் 3 பேரும் முறையிட்டனர். அதனால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் பொய் வழக்குப் போட்டது தெரியவந்ததால், 3 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து தங்களை 160 நாட்கள் சிறையில் வைத்ததால் தன்னுடைய கல்லூரி படிப்பு சிதைந்து விட்டது. அதனால், தனக்கு ^50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் அனுமோகன் வழக்குத் தொடர்ந்தார். உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டார். கூடுதல் டிஜிபி அர்ச்சனா, ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி கண்ணப்பன் உத்தரவின்பேரில், எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், விசாரணை நடத்தி, ஏற்கனவே பொய் வழக்குப் போட்டதை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் ஆகியோர் நேற்று இரவு தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 2006ம் ஆண்டு தூத்துக்குடியில் தனியார் நிறுவன உரிமையாளருக்கும், ஊழியர் ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், ஊழியர் ஈஸ்வரமூர்த்தி கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இது குறித்து அவரது மனைவி டிஜிபியிடம் புகார் செய்தார். டிஜிபியும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். அதில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஈஸ்வரமூர்த்தி மீது பொய் வழக்குப் போட்டது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து காந்தி 2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ராஜமாணிக்கம், ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் ஆற்காடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக காந்தியும், மதுரை குற்ற ஆவணக்காப்பகத்தில் ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். எஸ்.ஐ.ராஜ்குமார் சஸ்பெண்டில் இருந்தார்.
இப்போது, அனுமோகன் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து காந்தி, ஸ்டீபன் லூயிஸ் செல்வராஜ் ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், அவர்கள் அடிக்கடி பல இடங்களில் வாகனச் சோதனை நடத்தி, பொய் வழக்குப் போடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். மேலும் 6க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்கும் போட்டிருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்ட 2 பேரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எஸ்.ஐ. ராஜமாணிக்கத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-தினகரன் 7-8-2010

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP